திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியத்திற்குட்பட்ட மேலப்பாளையூர் ஊராட்சியைச் சேர்ந்த நீலமேகம் என்பவர் தனது வயலில் சம்பா சாகுபடி செய்திருந்தார். உரத் தட்டுப்பாடு, ஆணைக்கொம்பன் ஈ தாக்குதல், தீடிர் மழை எனப் பல்வேறு இன்னல்களைத் தாண்டி அறுவடைக்கு தயாரான நெற்பயிர்களை அறுவடை செய்ய, அறுவடை இயந்திர தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று அவரது வயலின் அருகிலிருந்த பனை மரம் மின்சாரக் கம்பியில் உரசி தீப்பிடித்து, வயலில் விழுந்தாகக் கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட தீயானது மளமளவென வயல் முழுவதும் பரவியதில் அறுவடைக்குத் தயாராக இருந்த இரண்டு ஏக்கர் நெற்பயிர்கள் முழுவதும் தீக்கிரையாகின. நெற்பயிர்கள் தீப்பிடித்து எரிவதைக் கண்டு அருகில் உள்ளவர்கள் உடனடியாகத் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்ததில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர்.
இதுதொடர்பாகப் பாதிக்கப்பட்ட விவசாயி நீலமேகம் கூறுகையில், தான் விவசாயத்தை மட்டுமே சார்ந்து வாழ்ந்து வருவதாகவும் அறுவடை செய்து லாபம் ஈட்டும் தருவாயில் எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்து காரணமாக மொத்தமும் நஷ்டமடைந்து வாழ்வாதாரத்தை இழந்து நிற்பதாகவும் வேதனை தெரிவித்தார். மேலும், மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அரசும் பாதிப்பைக் கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
இதையும் படிங்க:'சூரிய மின்விளக்குப் பொறி பூச்சிகளை அழித்துவிடுகிறது' - விவசாயிகள் மகிழ்ச்சி