திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே தலையாமங்கலம், மன்னார்குடி உள்ளிட்ட பல பகுதிகளிலும் மத்திய அரசின் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின்கீழ் வீடு கட்ட கிராம மக்கள் விண்ணப்பித்திருந்தனர்.
ஆனால், விண்ணப்பித்தவர்களுக்கு வீடு கட்டி கொடுக்காமலேயே மாடி வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுவிட்டதாகவும், அதற்கான தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுவிட்டதாகவும் வாழ்த்துக் கடிதம் வந்ததால் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்த செய்தி ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பிஆர். பாண்டியனின் மாமியார் சந்திரா ஓட்டு வீட்டில் வசித்துவந்தார். இவர் மாடி வீடு ஒன்று கட்ட வேண்டுமென நிதி உதவி கேட்டு பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின்கீழ் ஊராட்சி நிர்வாகத்திடம் விண்ணப்பித்திருந்தார்.
வீடு கட்டும் பணிகள் நிறைவடைய உள்ள நிலையில் அலுவலர்கள் யாரும் பார்வையிட்டு ஆய்வுசெய்யவில்லை எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக சந்திரா, அவரது உறவினர் பிஆர். பாண்டியன் ஆகியோர் மாவட்ட கூடுதல் ஆட்சியர் கிஷோர் குமாரிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர்.
பின்னர் பி.ஆர். பாண்டியன் செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகையில், ”பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் தலையிட்டு சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேற வேண்டும்: பி.ஆர்.பாண்டியன்