மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் விவசாய சங்கத்தினர் மற்றும் பல்வேறு கட்சியினர் மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தமிழ்நாட்டிலும் விவசாயிகள் அனைத்து கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இதன் ஒரு பகுதியாக திருவாரூர் தலைமை தபால் நிலையம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுப்ரமணியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது வேளாண் விளைபொருட்கள் விற்பனை மற்றும் வணிக மேம்பாட்டு எளிமைப்படுத்தப்பட்ட சட்டம் 2020, உழவர்களுக்கான விலை உறுதி மற்றும் பண்ணை சேவை ஒப்பந்தச் சட்டம் 2020, சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய மத்திய அரசை கண்டித்தும் இந்த வேளாண் சட்டங்களை ஆங்கிலத்தில் அமல்படுத்த கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய விவசாயிகள் சங்க போராட்ட ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் மற்றும் விவசாயிகள் என 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.