திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களில் விவசாயிகள் சம்பா தாளடி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் பொதுப்பணித்துறை அலுவலர்கள் முறை வைத்து தண்ணீர் திறந்து விடுவதால் உரிய நேரத்தில் தண்ணீர் வராமல் விவசாயிகள் தவித்து வந்தனர். குறிப்பாக கொல்லுமாங்குடியில் இருந்து காரைக்கால் நோக்கிச் செல்லக்கூடிய நாட்டாற்றில் தண்ணீர் கடந்த 15 நாள்களுக்கு மேலாக போகாததால் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.
இது குறித்து ஈடிவி பாரத் தமிழ் தளத்தில் நேற்று (நவ. 7) விவசாயிகளின் பேட்டியுடன் செய்தி வெளியிடப்பட்டு, பொதுப்பணித்துறை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்றிரவு பொதுப்பணித்துறை அலுவலர்கள் நாட்டாற்றில் தண்ணீர் திறந்துவிட்டனர். இதனால், அங்கு நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தண்ணீரின்றி தவித்துவந்த விவசாயிகள் தற்போது மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், “கடந்த 15 நாள்களுக்கும் மேலாக நாட்டாற்றில் தண்ணீர் இல்லாமல் வறண்டு போய் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்த நிலையில், ஈடிவி செய்தி சேனல் மூலம் நாட்டில் தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்திருந்தோம். இந்நிலையில் பொதுப்பணித்துறை அலுவலர்களின் கவனத்திற்குச் சென்று நேற்று இரவு நாட்டாற்றில் தண்ணீர் திறந்து விட்டுள்ளனர். செய்தி வெளியிட்டு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுத்த ஈடிவி பாரத் செய்தி நிறுவனத்திற்கு விவசாய சங்கங்களின் சார்பாக நன்றி தெரிவித்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க...நீரின்றி சேற்றில் நடவு நடும் அவலம்!