மின் விநியோகங்களில் தனியார்மயத்தை புகுத்திடும் விதமாக முதல் கட்டமாக யூனியன் பிரதேசங்களில் தனியார்மயத்தை புகுத்திட மத்திய அரசு அறிவிப்பு செய்துள்ளது.
இந்த அறிவிப்பு அனைத்து மாநிலங்களிலும் அடுத்து புகுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இச்செயலை எதிர்த்தும், உடனடியாக இந்நடவடிக்கையை கைவிடக் கோரியும், மின்சார சட்டத்திருத்த மசோதாவை கைவிடக் கோரியும் அனைத்து மின்வாரிய அலுவலங்கள் முன்பு 10- நிமிட ஒலி முழக்கமிட, தமிழ்நாடு மின்வாரிய அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்திருந்தது.
இந்நிலையில், இன்று மன்னார்குடி பூக்கொல்லை சாலையில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு மின்வாரிய பொறியாளர் சங்க திருச்சி மண்டல செயலாளர் சா.சம்பத் தலைமையில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஒலி முழக்கம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, விற்காதே விற்காதே பொதுத் துறைகளை விற்காதே...! என்ற ஒலி முழக்கங்கள் மத்திய அரசுகளுக்கு எதிராக எழுப்பப்பட்டன. இந்த போராட்டத்தில் சம்மேளன கோட்ட செயலாளர் சூ.ஜெயபால், தொழிலாளர் முன்னேற்ற சங்க கோட்ட செயலாளர் சு.காளிதாஸ், மத்திய அமைப்பு திட்ட தலைவர் சி.சகாயராஜ், பொறியாளர் கழக கோட்ட செயலாளர் சு.சங்கர் குமார், அனைத்து சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:தனியார் பேருந்துகளுக்கு தொடங்கியது முன்பதிவு