தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்துள்ள வடுவூர் சோதனைச் சாவடியில் சோதனையின்போது சுமார் 9.82 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் ஏற்றிவந்த சிறிய ரக கன்டெய்னரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் உரிய ஆவணங்கள் இல்லாததால் நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும் மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 14 சோதனை சாவடிகளில் நேற்று இரவு நடத்தப்பட்ட சோதனையில் 19 கோடியே 28 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சமார் 65 கிலோ மதிப்புள்ள தங்க வைர நகை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் பழைய நகைகளுக்கு பதிலாக புதிய மாற்று நகைகள் செய்வதற்காக கொண்டு செல்லப்படுவதாக தனியார் நிறுவனம் தெரிவிக்கிறது. கைப்பற்றப்பட்ட நகைகள் அனைத்தும் அந்தந்த பகுதி தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.