திருவாரூர்: அடியக்கமங்கலம் நடுத்தெருவைச் சேர்ந்த இதயத்துல்லா என்பவரின் மனைவி, தாஜின்னிஷா (70). இவரது கணவர் இதயத்துல்லா சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த நிலையில், கடந்த 1997ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் உயிரிழந்து விட்டார். இந்த நிலையில், தாஜின்னிஷா தனது மூத்த மகள் கமர் நிசாவுடன் வசித்து வருகிறார்.
தாஜின்னிசாவின் மகன் முஹம்மது அன்சாரி, சிங்கப்பூரில் தற்போது பணிபுரிந்து வருகிறார். மேலும், சிங்கப்பூர் குடிமகனாகவும் அவர் இருந்து வருகிறார். இந்த நிலையில், தாஜின்னிஷா தனக்கு சொந்தமான சொத்து வீதத்தை, தன்னை பராமரித்து வரும் தனது மூத்த மகள் கமர் நிஷாவின் பெயரில் தான செட்டில்மெண்ட் எழுதி வைத்துள்ளார்.
இந்த நிலையில், சிங்கப்பூரில் இருந்து ஊருக்கு வரும் மகன் முகமது அன்சாரி, அடிக்கடி தாங்கள் குடியிருக்கும் வீட்டை தனக்கு கொடுக்குமாறு பிரச்னை செய்வதாகவும், 70 வயதான தன்னை தாய் என்றும் பாராமல் தகாத வார்த்தைகளால் திட்டி அடித்து துன்புறுத்துவதாகவும், மது அருந்திவிட்டு தானும், தனது மகளும் இருக்கும் வீட்டை உடைக்க முயற்சிப்பதாகவும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடந்த பெட்டிஷன் மேளாவில் மனு கொடுக்க வந்திருந்தார்.
மகனின் செயல்களால் நிம்மதியாக வாழ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், தனது மகன் தன்னை மிகுந்த தொந்தரவு செய்வதாகவும், வீட்டிற்கு பின்புறம் உள்ள இடத்தை அவனுக்கு கொடுத்தும், தனது வீதத்தை கேட்டு துன்புறுத்தி வருவதாகவும், எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தாஜின்னிஷா அவரது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கண்ணீர் மல்க தன்னை பாதுகாக்க வேண்டும் எனவும், நாங்கள் இங்கு வந்திருக்கும் நேரத்தில் அத்துமீறி சுவர் ஏறி குதித்து, தனது மகன் வீட்டின் பூட்டை உடைத்து வருவதாகவும் சிசிடிவி ஆதாரத்துடன் முறையிட்டு கோரிக்கை வைத்தார். இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், உடனடியாக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் பேசி, நிகழ்விடத்திற்குச் சென்று தனக்கு தகவல் தெரிவிக்கும்படி கூறினார்.
மேலும், வயதான தாய் ஒருவர் தனது மகன் தன்னை தாக்குவதாகவும், தன்னை கடைசி காலத்தில் பராமரித்து வரும் தனது மகளுக்கும் தொந்தரவு கொடுத்து, தான் வாழ்ந்து வரும் வீட்டையும் அபகரிக்க முயல்வதாகக் கூறி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே இந்த சொத்து தொடர்பாக முகமது அன்சாரி, திருவாரூர் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நடிகர் விஜயை நோக்கி காலணி வீசிய விவகாரம்: கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார்!