திருவாரூர்: பவித்ரமாணிக்கத்தில் பழுதடைந்துள்ள துணை மின் நிலையத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை.
திருவாரூர் பவித்திரமாணிக்கம் பிரதான சாலையில் 110-கிலோ வாட், 230 கிலோ வாட் திறன் கொண்ட இரண்டு துணை மின் நிலையங்கள் அருகருகே அமைந்துள்ளது. இதன் மூலம் ஏராளமான கிராமங்களுக்கு மின் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த துணைமின் நிலையத்தில் பணிபுரியும் அலுவலர்களூம் மற்றும் ஊழியர்கள் தங்குவதற்காக சுமார் 30-ஆண்டுகளுக்கு முன் குடியிருப்புகள் கட்டி கொடுக்கப்பட்டது.
கஜா புயலின்போது இந்த குடியிருப்புக் கட்டடங்கள் முழுவதும் இடிந்து விழுந்து சேதமடைந்ததால், குடியிருப்புகளில் தங்கியிருந்த அலுவலர்களும், ஊழியர்களும் வெளியிடங்களில் தங்கி பணிக்கு வந்து கொண்டிருக்கின்றனர்.
இச்சூழலில், துணை மின் நிலையங்கள் அமைந்துள்ள இடத்தில் காடுபோல் செடி கொடிகள் வளர்ந்தும், முட்புதர்கள் நிறைந்து, விஷப் பூச்சிகள் நடமாட்டம் அதிகரித்தும், சமூக விரோத செயல்கள் நடைபெறும் கூடாரமாகவும் மாறியுள்ளது. மேலும், இந்த துணை மின் நிலைய வாயிலில் அமைந்துள்ள மின் விளக்குகள் முழுவதும் எரியாமல் உள்ளதால், அப்பகுதி இருளில் மூழ்கி மக்கள் அச்சத்துடன் அவ்விடத்தை கடக்கும் நிலையுள்ளது.
அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் தினமும் அங்கு வீசும் துர்நாற்றத்தால், மூக்கை பிடித்துக் கொண்டு பணியாற்றும் அவலநிலை உள்ளது. இதுகுறித்து அலுவலர்களிடத்தில் பலமுறை தெரிவித்தும், எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்த துணைமின் நிலையத்தை சீரமைத்தும் அதேபோல் இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு புதிய குடியிருப்புகளை கட்டித்தர சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமுக செயற்பாட்டாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.