திருவாரூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் நேற்று அதிகாலை பவித்திர மாணிக்கம் பகுதியைச் சேர்ந்த காமராஜ்(56) என்பவர் மூச்சுத் திணறல் காரணமாக அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவரது மகன் தாமரைச்செல்வன், பணியிலிருந்த பெண் மருத்துவர் பிரபா மற்றும் செவிலியர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதனால் மருத்துவர்களும், செவிலியர்களும் பணியைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, தாமரைச் செல்வன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பெயரில் தாமரைச் செல்வன் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் மருத்துவக் கல்லூரி முதல்வர் விஜயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு வரும் நபர்களுடன், வருகின்ற உறவினர்கள் மதுபோதையில் வந்தால் உடனடியாக மருத்துவமனையை விட்டு வெளியேற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக மது குடித்த கண்டறிவதற்கான கருவிகள் வாங்கப்பட உள்ளன. சோதனை செய்த பின்னரே உறவினர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
மருத்துவர்கள் பணி பாதுகாப்புக்காகக் கூடுதலாக காவல் துறையினர், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் மருத்துவமனை காவலர்களையும் அதிகப்படுத்துவதோடு, சிசிடிவி கேமரா பொருத்தப்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது” என்றார்.