திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு நிதி வழங்காமல் ஏமாற்றும் தமிழ்நாடு அரசைக் கண்டித்து, திருவாரூர் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி கே. கலைவாணன் தலைமையில் 500-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர். அவை பின்வருமாறு
ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு ஏழு மாத காலமாக வழங்காமல் இருக்கும் பொது நிதியை உடனடியாக வழங்கிட வேண்டும்.
ஊராட்சி மன்ற தீர்மானத்தின் அடிப்படையில் ஆடு, மாடு கொட்டகைகள் பயனாளிகளுக்குத் தேர்வு செய்திட வேண்டும்.
குப்பை வண்டி, விளம்பரப்பலகை, எழுது பொருள்கள் மற்றும் நிர்வாகத்துக்குத் தேவையான பொருள்கள் வழங்கும்போது, ஊராட்சி மன்றத்தின் அனுமதி பெற வேண்டும்.
மேலும் ஊராட்சி மன்ற கணக்கு எண் 2, 9 இல் உள்ள லட்சக்கணக்கான தொகையினை ஊராட்சியின் வளர்ச்சி பணிக்குப் பயன்படுத்த அனுமதி வழங்கிட வேண்டும்.
மாவட்டத்திற்கான வளர்ச்சி நிதியை நன்னிலம் தொகுதிக்கு மட்டும் வழங்குவதைத் தவிர்த்து, திருவாரூர் மாவட்டம் முழுமைக்கும் பரவலாக வழங்கிட வேண்டும்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தமிழ்நாடு அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு மற்றும் திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் ஆடலரசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.