திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகா மணவாளநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன்(48). இவர் தற்போது மணவாளநல்லூர் திமுக ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளார்.
இவர் நேற்றிரவு(அக்.08) ஏரவாஞ்சேரியிலிருந்து அவரது சொந்த ஊரான மணவாளநல்லூருக்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். தேதியூர் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிரே நான்கு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் கணேசனை அரிவாளால் சராமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றனர்.
இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் கணேசனை மீட்டு, கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும்போது வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து ஏரவாஞ்சேரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.