ஏமாற்றம் அளிக்கும் நிதிநிலை அறிக்கை - முத்தரசன் விமர்சனம் - அதிமுக அரசின் நிதிநிலை அறிக்கை ஏமாற்றம் அளிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் விமர்சனம்
திருவாரூர்: அதிமுக அரசின் நிதிநிலை அறிக்கை ஏமாற்றம் அளிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில்,
'திருவாரூரை வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டம் என அறிவிக்கக்கோரி ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் மகாலிங்கம் என்ற விவசாயி உயிரிழந்ததையடுத்து, அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவைக் கூடி, தமிழ்நாட்டை வறட்சியால் பாதிக்கக்கப்பட்ட மாநிலமாக அறிவித்தது. அதன்பின், தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்த 2020-21ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் விவசாயக்கடனை தள்ளுபடி செய்வதற்கு மாறாக, நீண்ட கால கடனாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அந்தப் பிரச்னைக்கு இந்த நிதிநிலை அறிக்கையில் தீர்வு கிடைக்கும் என நம்பிக்கையோடு இருந்த விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் அளிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு எந்தத் திட்டங்களும் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லை. நிதி விவகாரத்தில் மத்திய அரசை முழுமையாக தமிழ்நாடு அரசு நம்பியிருக்கிறது. ஜி.எஸ்.டி. என்ற பெயரில் வரிகள் அனைத்தையும் மத்திய அரசு வசூலித்துக் கொண்டு, பிற மாநிலங்களைப் போல் தமிழ்நாட்டுக்கும் பாக்கி வைத்துள்ளது. ஜி.எஸ்.டி. மட்டுமல்லாமல் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய நிதி உட்பட எந்த நிதியையும் வழங்கவில்லை’ என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், 'மத்திய அரசு வழங்கும் நிதியைக் கொண்டு ஓராண்டு காலத்துக்கு நிர்வாகம் நடத்தலாம். ஆனால், 2020-21ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை என்பது தமிழ்நாடு மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது' இவ்வாறு கூறினார்.
இதையும் படிங்க: தகவல் தொழில்நுட்பத் துறைக்கு ரூ.153.97 கோடி ஒதுக்கீடு!