திருவாரூர்: பெட்ரோல் விலை 100 ரூபாய் தாண்டியதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் பெட்ரோல் விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பெட்ரோல் விலையை கட்டுப்படுத்த கோரிக்கை:
இந்த மாதம் மட்டுமே பெட்ரோல் விலை 95 ரூபாயிலிருந்து படிப்படியாக 102 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது. இந்நிலையில், வாகன ஓட்டிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், டிராவல்ஸ் தொழில் நடத்தி வருபவர்கள், தினசரி இருசக்கர வாகனம் வசதியை நம்பிய தொழில் செய்து வருகிற அனைவரும் பெரும் வேதனைக்கு உள்ளாகிவருகின்றனர்.
இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த ஒன்றிய அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாடகை ஆட்டோ, சுமோ, லாரி ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேதனை தெரிவிக்கும் வாகன ஓட்டுநர்கள்:
இது குறித்து வாடகை கார் ஓட்டுநர் கூறுகையில், “பெட்ரோல் விலை உயர்வினால் நடுத்தர மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பெட்ரோல் விலை உயர்வினால், கார் வாடகை அதிகமாகும் இது பொதுமக்களுக்கே பெரும் துயரத்தை உண்டாக்கி வருகிறது.
தூங்கி எழுந்த உடனே பெட்ரோல் விலை உயர்ந்துள்ளதா என்பதைதான் பார்கவேண்டியதாக உள்ளது. இந்த பெட்ரோல் விலை உயர்வினால், வாகனங்களுத் தேவையான ஆயில் உள்ளிட்ட பொருள்களின் விலையும் உயர்ந்துள்ளது.
கரோனா காலத்தில் பொதுமக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்னும் எண்ணத்தில் இருந்த எங்களுக்கு, பெட்ரோல் விலை பெரும் இடியாக தலையில் விழுந்துள்ளது” என வேதனை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: சைக்கிளில் சென்ற ஜோதிமணி: பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு