திருவாரூர்: தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 9ஆம் தேதி சேலத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியாகி ஓராண்டு கடந்துள்ள நிலையில் அதற்கான மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும், இது குறித்து பேசிய விவசாயிகள், "காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயத்திற்கு அச்சுறுத்தலாக இருந்து வந்த ஹைட்ரோ கார்பன், ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறுகள் தோண்டும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் டெல்டா மாவட்ட விவசாயிகளும், எதிர் கட்சிகளும் பல்வேறு கட்டப் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்தாண்டு டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தார். இதனை, விவசாயிகளாக நாங்கள் வரவேற்றோம். ஆனால், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு ஒராண்டு கடந்துள்ள நிலையில் அதற்கான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை.
எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகளின் நலனை கவனத்தில் கொண்டு டெல்டா மாவட்டத்தில் தற்போது வரை செயல்பட்டு வரும் ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறுகளை அகற்றி புதிய கிணறுகள் அமைப்பதை தடுத்து நிறுத்தி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்கான மாவட்ட அளவிலான குழுவை அமைத்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.
இதையும் படிங்க: பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு புதிய உரிமங்கள் வழங்குவதா? வைகோ கண்டனம்!