திருவாரூர் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக திருவாரூர் மாவட்டத்திலுள்ள 4 நகராட்சிகள், 430 ஊராட்சிகளிலும் சுகாதாரத்துறை ஊழியர்கள் அடங்கிய குழுவினர் அமைக்கப்பட்டு அனைத்து பகுதிகளிலும் கிருமிநாசினி, கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு நிகழ்வுகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்டு வருகின்றன.
குறிப்பாக இஸ்லாமிய மத மாநாட்டில் கலந்து கொண்டு வந்த திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 12 பேர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதே போல் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 11பேருக்கு கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றது.
இந்நிலையில் கரோனா தொற்று பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டவர்களின் உறவினர்கள், உடல்நிலை பாதித்து மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் ஆகியோரை கரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காக உள்நோயாளிகள் பிரிவு வாசலில் கிருமிநாசினி தெளிப்பான் சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
இதனை திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர். முத்துக்குமரன் திறந்துவைத்தார். மேலும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வருபவர்கள் அனைவருக்கும் முகக் கவசம் இலவசமாக வழங்கப்பட்டு அதன் பின்னரே மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.