நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வாஞ்சூர், கர்ணாவூர், தேவங்குடி, கூத்தாநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முகாம்களின் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ், திருவாரூர் மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் ஷில்பா சதீஷ் பிரபாகர், மாவட்ட ஆட்சியர் சாந்தா உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வுசெய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "முதலமைச்சர் பழனிசாமி நிவர் புயல் தற்போதைய நிலவரமான மழை அளவு, காற்றின் அளவு, ஆகியவற்றினை கூத்தாநல்லூரில் ஆய்வு மேற்கொண்டதை தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டறிந்தார்.
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (நவ.24) இரவுவரை நான்காயிரத்து 155 பேர் தங்கவைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டுவருகிறது. தாழ்வான பகுதிகளில் உள்ளவர்கள் முகாமுக்கு அழைத்துவரப்படுகிறார்கள். எத்தனை பேர் வந்தாலும் முகாம்களில் உணவளிக்க வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். எனவே, தாழ்வான பகுதியில் இருப்பவர்கள் அச்சமின்றி உனடியாக முகாம்களுக்கு வர வேண்டும் எனத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒட்டுமொத்த அலுவலர்கள் இணைந்து இப்பணிகளை மேற்கொண்டுவருகின்றனர், தாழ்வான பகுதியில் இருப்பவர்களை முகாம்களுக்கு அழைத்துவருவதற்கான நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் செய்யப்பட்டுவருகிறது. நிவர் புயல் நிவாரண முகாம்களில் முகக்கவசம், கபசுர குடிநீர் வழங்கப்பட்டு மருத்துவச் சிகிச்சை செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன" என்றார்.
இதையும் படிங்க: நிவர் புயல்: 12 மாவட்டத்தில் குடிமைப்பொருள்கள் இருப்பு!