திருவாரூர்: தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், திருவாரூர் மாவட்டம் முழுவதும் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது.
இதில், குறிப்பாக நன்னிலம் கொல்லுமாங்குடி, பாவட்டகுடி, திருக்கொட்டாரம், கமுக்கடி, முகந்தனூர், மாத்தூர் உள்ளிட்ட அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்கள் முழுவதும் தேங்கியுள்ள மழைநீர் இதுவரை வடியாமல் வயலிலேயே தேங்கியுள்ளது. இதனால், நெற்பயிர்கள் முழுவதும் நீரில் மூழ்கி அழுகும் நிலையில் உள்ளது.
வாய்க்கால்கள் தூர்வாரப்படவில்லை
மேலும் நீர் வடியாததற்குக் காரணம் வாய்க்கால்கள் சரிவர தூர்வாரப்படாமல் இருப்பதுதான் என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
மழையால் பாதிக்கப்பட்டப் பகுதிகளுக்கு மாவட்ட ஆட்சியரும் வேளாண்துறை அலுவலர்களும் இதுவரை வந்து பார்வையிடவில்லை என விவசாயிகள் வேதனைத் தெரிவிக்கின்றனர்.
எனவே, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கவனத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து உடனடியாக ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்க நடவடிக்கை வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: மழை வெள்ள பாதிப்பில் மக்களுடன் இரண்டாவது நாளாக ஸ்டாலின்!