திருவாரூர்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட சிறப்பு கூட்டம் நேற்று (டிச.27) திருவாரூரில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடன் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், "வடகிழக்கு பருவமழை வழக்கத்திற்கு மாறாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களிலும், இதைத்தொடர்ந்து, தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி பகுதியில் அதிகன மழை பெய்ததால் மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில், ஒவ்வொரு குடும்பமும் பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளை இழந்துள்ளனர், மனித உயிர் இழப்புகள் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தகைய சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். குடும்ப அட்டைகளுக்கு 6 ஆயிரம் மற்றும் கால்நடைகள், விவசாயிகள், இறந்தவர்கள் என தமிழக அரசின் சார்பில் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாமல் கட்டடங்கள், சாலைகள், வீடுகள் என பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இவைகள் அனைத்தையும் மீண்டும் சரி செய்ய வேண்டுமென்றால், மாநில அரசால் மட்டுமே முடியாது. மத்திய அரசும் உதவி செய்ய வேண்டும். பேரிடர் நிதி என ஒன்று உள்ளது, பேரிடர் கமிட்டி அதற்கு தலைமை தாங்குகிறார்.
மாநில அரசு நிதி தேவை என்கிற வேலையில், ஏற்கனவே வந்த மத்திய குழு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆகியோரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மத்திய அரசிடம் நேரில் சென்று வலியுறுத்தியுள்ளார். அவர்கள் கொடுத்த நிதி என்பது ஆண்டுதோறும் வழக்கமாக கொடுக்க வேண்டிய நிதியை மட்டும் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், பருவ மழையால் ஏற்பட்ட பாதிப்புக்கு மத்திய அரசு ஒரு பைசா கூட நிதி கொடுக்கவில்லை.
இதற்கு மாறாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மிகவும் அருவருக்கத்தக்க வகையில் பேட்டி கொடுத்துள்ளார். அதாவது இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், ஏன் இந்தியா கூட்டணியில் (INDIA Alliance) முதல்வர் கலந்து கொண்டுள்ளார் என நிதி அமைச்சர் கேட்கிறார். அவர் அதில் மட்டும் கலந்து கொள்ளவில்லை பிரதமரையும் சந்தித்துள்ளார், அதைப் பற்றி ஏன் நிதியமைச்சர் கூறவில்லை.
அது மட்டுமில்லாமல் பேரிடர் மாவட்டங்களாக அறிவிக்க முடியாது என நிதியமைச்சர் கூறுகிறார். எனவே, தமிழ்நாடு முழுவதும் சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் ஜனவரி 8ஆம் தேதி மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து பேசிய அவர், பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஒரு சர்ச்சைக்குரிய நபர். அவர் மீது பல்வேறு புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தன. அவர் ஒரு பாஜக நபர் போல் செயல்பட்டு வந்தார். பெரியார் பல்கலைக்கழகத்தின் பெயரை பயன்படுத்தி தனியாக பல நிறுவனங்களை உருவாக்கினார் என்ற புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வெளியே வந்துள்ளார். இதில் நடவடிக்கை எடுத்தது வரவேற்கத்தக்கது.
ஏற்கனவே, பெட்ரோலிய நிறுவனங்கள் மூலம் எண்ணெய் கசிவு ஏற்பட்டு கடல் வாழ் உயிரினங்கள், மீனவர்கள் என பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனத்திடம் இருந்து ஒரு பெரிய தொகையை மாநில அரசு வசூல் செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். தற்போது உர தொழிற்சாலையில் இருந்து கசிவு ஏற்பட்டு 50க்கும் மேற்பட்ட நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பராமரிப்பு குறைவின் காரணமாக இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரிய நிறுவனங்கள் ஒரு பொறுப்பற்ற முறையில் செயல்படுகிறது என்பது இது உணர்த்துகிறது. இதை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் ஒழுங்காக கண்காணிக்கவில்லை. தற்போது இதில் அரசு உடனடியாக தலையிட்டு தற்காலிகமாக செயல்பட அதனை தடை செய்திருக்கிறார்கள். பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில், கவனமற்ற முறையில் செயல்படும் நிறுவனங்கள் மீது அரசு தனி கவனம் செலுத்தி, சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 38 பேருக்கு கரோனா பாதிப்பு!