திருவாரூர் மாவட்டத்தில், கரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே வருகிறது. இதுவரை திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (ஜூலை 8) வரை 614 நபர்களுக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், மேலும் 32 நபர்களுக்கு புதியதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 646ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், திருவாரூர் மாவட்டம், கிடாரங்கொண்டான் பகுதியைச் சேர்ந்த ஆறு வயது சிறுமி; குவைத்தில் பணிபுரிந்து திருவாரூர் திரும்பிய ஏழு நபர்கள் உட்பட 32 பேருக்கு கரோனா உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் பாமணி, குடவாசல், உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் அனைவரும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மேலும், ஓஎன்ஜிசி-இல் பணியாற்றிய பிகார் மாநிலத்தைச் சேர்ந்த நபருக்கு திருவாரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில், கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவருக்கு மீண்டும் பரிசோதனை செய்ததில் தொற்று இல்லை எனத் தெரியவந்துள்ளது.
இதனால் மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்தது. ஒரே நேரத்தில் தனியார் மருத்துவமனை, அரசு மருத்துவமனையில் இரு வேறு பரிசோதனை முடிவுகள் வந்ததால் குழப்பம் ஏற்பட்டது.
இதையும் படிங்க:பெங்களூருவில் 3 ஆயிரத்தைத் தாண்டிய கரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகள்!