திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 பேருக்கும் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 27 பேருக்கும் கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தனர். இந்நிலையில், இன்று திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு பேரும் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு பேரும் என 6 பேர் முழுவதுமாக குணம் அடைந்தனர்.
இதையடுத்து, மருத்துவமனையில் வெளிநோயாளிகள் பிரிவு முன்பாக அவர்கள் தனிமையாக அமர வைக்கப்பட்டு, மருத்துவக் கல்லூரி முதல்வர் முத்துக்குமரன் தலைமையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உற்சாகமாக கைத்தட்டி, அவர்களை அவரவர் வீடுகளுக்குத் தனி ஆம்புலென்ஸ் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
அப்போது, குணமடைந்து வீட்டிற்குத் திரும்புபவர்கள் 14 நாள்கள் தனிமையில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இந்நிலையில் நேற்று நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 12 பேர் முழுவதுமாக குணமடைந்து வீட்டிற்குத் திரும்பியதையடுத்து, இன்று ஆறு பேர் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 14 பேரும் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 17 பேரும் கரோனா வார்டில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25,000 வழங்கிய ராகவா லாரன்ஸ்