இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,173ஆக உயர்ந்துள்ளது. இதில் 11 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் 16 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டது. இவர்கள் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தனர்.
இதில் முதல் கட்டமாக 13 பேருக்கு 14 நாட்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர்களுக்கு நோய் தொற்று தாக்கம் குறித்து ரத்தப் பரிசோதனை மீண்டும் இரண்டு முறை எடுக்கப்பட்டது. இதில் 7 பேர் கரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து விடுபட்டு குணமடைந்து இருப்பதாக பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அவர்கள் பாதுகாப்பு கருதி இரண்டு வாரங்களுக்கு திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் செயல்படும் கரோனா தனி வார்டில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இதில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 9 பேர் மட்டும் தொடர்ந்து தீவிர சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.
மேலும் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 29 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் அவர்கள் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதனால் 38 பேருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது என மருத்துவக் கல்லூரி முதல்வர் முத்துக்குமரன் தெரிவித்தார்.
இதையும் படிங்க...பிளாஸ்மா சிகிச்சை: கோவிட்-19 பாதிப்பிலிருந்து மீளும் மூன்று இந்திய அமெரிக்கர்கள்!