இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
காவிரி டெல்டாவில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்குத் தடை விதித்து, காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு அரசின் அனுமதியில்லாமல் கச்சா எடுக்கிறோம் என்கிற பேரில் திருவாரூர் மாவட்டத்தில் சோழங்கநல்லுர், கொரடாச்சேரி பகுதிகளிலும், தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே தீவாம்பாள்புரம் போன்ற பல்வேறு இடங்களில் பேரழிவை ஏற்படுத்தும் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைத்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது கரோனா குறித்த தடுப்பு நடவடிக்கைகளில் அனைவரும் ஈடுபட்டு வரும் நிலையில் ஒஎன்ஜிசி தனது பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். ஏற்கனவே கச்சா எடுத்து வரும் கிணறுகளில் கச்சா வற்றிய நிலையில் ஹைட்ரோகார்பன், பாறை எரிவாயு எடுப்பதற்கு நீரியியல் விரிசல் முறைகளை பயன்படுத்தி மறைமுக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
இதனை தமிழ்நாடு அரசு உயர் மட்ட ஆய்வுக் குழு அமைத்து தடுத்து நிறுத்திட முன்வர வேண்டும். மேலும் கரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், ஒஎன்ஜிசி நிறுவனங்களில் வெளிநாடுகள், வட மாநிலத்தவர்கள் அதிக அளவில் பணியாற்றி வருகிறார்கள்.
இவர்கள் கரோனா விழிப்புணர்வு குறித்த அரசின் முன்னச்சரிக்கைப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவில்லை. மாறாக, தன் விருப்பத்திற்குக் கட்டுப்பாடற்ற முறையில் பணியாற்றி வருவதால் கிராமப்புறங்களில் விவசாய குடும்பங்கள் கரோனா அச்சத்தில் முடங்கி உள்ளனர்.
எனவே, கரோனா தடுப்பு நடவடிக்கைக் குழு மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒஎன்ஜிசியின் அதிகாரிகள், ஊழியர்களின் செயல்பாடுகள் குறித்து, முழுஆய்வு செய்து வெளிநாட்டவர், வெளி மாநிலத்தவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும்.
அவர்களை தமிழ்நாடு அரசு தனது முழு கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வர வேண்டும். கரோனா ஒழிப்பு நடவடிக்கை முடிவுக்கு வரும் வரை ஒஎன்ஜிசி செயல்பாடுகளை முடக்கி வைத்திடவும், அதுவரை கனரக வாகனங்கள், ஏராளமான அதிகாரிகளின் வாகனங்கள் கிராமங்களுக்குள் நுழைவதற்கும் தடை விதிக்க தமிழ்நாடு முதலமைச்சர் அவசரகால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுகிறேன் என்று தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கரோனா அச்சம்: கோட்டாட்சியர் அலுவலகத்தில் கட்டப்பட்ட வேப்பிலை