திருவாரூர் மாவட்டம் முழுவதும் நகர, கிராமப்புறங்களில் ஊரடங்கு உத்தரவு பின்பற்றப்படவில்லை. அதிக அளவு இருசக்கர வாகன போக்குவரத்து இருப்பதால் அலுவலர்கள் பொது மக்களை கட்டுப்படுத்த திணறி வருகின்றனர்.
கரோனா வைரஸை கட்டுப்படுத்த சமூக இடைவெளி ஒன்றே தீர்வு என்ற அடிப்படையில் மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. அதன்பேரில் நாடு முழுதும் 144-தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு அமலில் இருந்துவரும் நிலையில் அரசின் சட்டத்தை மீறி பொதுமக்கள் அத்தியாவசிய பொருள்கள் வாங்க எனும் பேரில் பொதுவெளிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
குறிப்பாக இருசக்கர வாகனங்களில் அதிகளவு பொதுமக்கள் வந்து கடைகளில் கூட்டமாக நின்று பொருள்களை வாங்குகின்றனர். பொதுமக்ககளைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் ஆங்காங்கே அறிவுறுத்தல் செய்தாலும் அதனை அவர்கள் பொருட்படுத்தாமல் உள்ளனர். திருவாரூர் மாவட்டம் முழுவதும் கரோனா பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகித்து 2542 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர மருத்துவக் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதனால் மருத்துவர்களும் காவல்துறையினரும் அச்சம் தெரிவித்து வரும் நிலையில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் இயல்பு நிலை இருப்பது போல் செயல்பட்டு வருவது அலுவலர்களுக்கு அதிர்ச்சி அளித்து வருகிறது. எனவே அனைத்து பகுதிகளிலும் சமூக இடைவெளியை பின்பற்றி பொருள்கள் வாங்கிச் செல்லவேண்டும், மேலும் சாலைகளில் சுற்றித் திரியும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்படுகிறது.
ஊரடங்கு உத்தரவை பின்பற்றாத பொதுமக்களால் கரோனா பெருந்தொற்று எளிதில் பரவும் நிலை உள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்