புதுடெல்லி: டெல்லியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருப்பதாகவும், கூலிபடைகளில் தலைநகராக டெல்லி மாறி வருவதாகவும் முதலமைச்சர் அதிஷி குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லியின் வடகிழக்கில் உள்ள சுந்தர் நாகாரி பகுதியில் இளம் பெண் ஒருவர் இரண்டு இளைஞர்கள் துன்புறுத்தியதை அந்தப் பகுதியை சேர்ந்த கிருஷ்ணகுமார் கண்டித்ததாகத் தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த அவர்கள் கிருஷ்ணகுமாரின் உறவினர் மணீஷ் என்ற இளைஞரை கத்தியால் குத்தியதில் படுகாயம் அடைந்த நிலையில் அவர் இறந்து விட்டார். இந்த நிலையில் டெல்லி முதலமைச்சர் அதிஷி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,"பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை இன்று சந்தித்து ஆறுதல் கூறினேன். அந்த குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும்,"என்று தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிஷி, "டெல்லி கூலிபடைகளின் தலைநகராக மாறி வருகிறது, குற்றவாளிகள், வழிப்பறியில் ஈடுபடுவோர், குண்டர்கள் பயமின்றி சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். யாரை வேண்டுமானாலும் துப்பாக்கியால் சுடலாம், கத்தியால் தாக்கலாம் போலீசார் ஒன்றும் செய்யமாட்டார்கள் என்று கருதுகின்றனர்.
டெல்லியின் சட்டம் ஒழுங்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. டெல்லி மக்களை காக்க உள்துறை அமைச்சகம் என்ன செய்திருக்கிறது என்று தெரிந்து கொள்ள விரும்புகின்றேன். டெல்லியில் சட்டம் ஒழுங்கு நிலை சீரழிந்துள்ளது. ஒவ்வொரு நாளும் வழிப்பறி, கொலைகள் நடைபெற்று வருகிறது. ஆனால், மத்திய உள்துறை அமைச்சர் தேர்தல் பரப்புரையில் மட்டும் கவனம் செலுத்துகிறார். டெல்லி சட்டம் ஒழுங்கை காக்க நடவடிக்கை எடுக்கவில்லை," என்று கூறியுள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்