சென்னை: கோயம்புத்தூர் மாவட்டம் சுகுணாபுரம், மயில்கள் பாரடிஸ் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ராபின் டென்னிஸ். இவருக்கு எலினா லாரெட் என்ற 15 வயதுடைய மகளும், ஹெரிட் என்ற 11 வயதுடைய மகளும் உள்ளனர். இதில், எலினா அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். கூடைப்பந்து விளையாட்டு வீராங்கனையான எலினா பல்வேறு இடங்களுக்கு சென்று விளையாடுவது வழக்கம்.
அந்த வகையில், மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள ஒரு பள்ளியில் நடைபெற்ற டோர்னமெண்ட் போட்டியில் கலந்து கொள்ள கடந்த 8 ஆம் தேதி இரவு 10 மணிக்கு தனது பயிற்சியாளர் மற்றும் சக விளையாட்டு வீராங்கனைகளுடன் கோவையில் இருந்து பேருந்து மூலம் பெங்களூர் சென்று அங்கிருந்து விமானம் மூலமாக குவாலியர் சென்றுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, 9ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டு விளையாடியபின் 14 மற்றும் 15ஆம் தேதிகளில் ஆக்ரா உள்ளிட்ட பல்வேறு இடங்களை இவர்கள் சுற்றிப் பார்த்துள்ளனர். இந்த நிலையில், குவாலியர் ரயில் நிலையத்தில் தனியார் உணவு செயலி மூலமாக எலினா சிக்கன் பர்கர் ஆர்டர் செய்து தன்னுடன் வந்த மற்ற வீராங்கனைகளுடன் பகிர்ந்து சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து, 16ஆம் தேதி அதிகாலை ஜி.டி.என் எக்ஸ்பிரசில் குவாலியரில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்தபோது சிக்கன் ஃப்ரைட் ரைஸ் சாப்பிடதாகவும், அன்று காலை 11 மணி அளவில் எலினாவிற்கு தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாகவும், உடனே அவருடன் இருந்த பயிற்சியாளர் அனுசியா ரயில்வே மருத்துவருக்கு தகவல் தெரிவித்து வாரங்கல் ரயில் நிலையத்தில் மதியம் 1 மணிக்கு மருத்துவர் வந்து முதலுதவி சிகிச்சை செய்து அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனாலும் தொடர்ந்து, எலினாவிற்கு வாந்தி, வயிற்று வலி இருந்ததால் 17ஆம் தேதி காலை சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், அங்கு அவருக்கு நீர் ஆகாரம் எடுத்துக் கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பள்ளியில் வைத்து ஆசிரியை கொலை; திருமணத்திற்கு மறுத்ததால் இளைஞர் வெறிச்செயல்!
அதன் பின்பு, பெரியார் நகரில் உள்ள தனது உறவினர் வீட்டில் ஓய்வெடுக்க எலினாவை அழைத்துச் சென்றதாகவும், அன்று காலை 11 மணிக்கு எலினா திடீரென மயங்கி கீழே விழுந்த நிலையில், அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதை அடுத்து, அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் எலினா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனை அடுத்து, தகவல் அறிந்த பெரவள்ளூர் போலீசார் எலினா உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதற்கிடையில், ரயிலில் வரும்போது சிக்கன் ஃப்ரைட் ரைஸ் சாப்பிட்டதால் வாந்தி மயக்கம் ஏற்பட்டு உயிரிழந்ததாக சந்தேகம் உள்ளது என உடன் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இத்தகைய சூழ்நிலையில், பிறக்கும்போதே டயாபார்ம் என்ற மெல்லிய தசைப் பகுதி ஒன்று வயிற்றின் இடது பக்கத்தில் இருந்ததாகவும், எகிறி குதித்து விளையாடும்போது அந்த தசைப் பகுதி மேல் நோக்கி நகர்ந்து குடல், கல்லீரல் மற்றும் இதயத்தை இறுக்கும் நிலைக்கு சென்றுள்ளதால் எலினா மூச்சடைப்பு ஏற்பட்டு இறந்திருப்பது எலினாவின் பிரேதப் பரிசோதனை அறிக்கையின் மூலமாக தெரிய வந்துள்ளதாகவும் காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டும் அல்லாது, இந்த டயாஃபார்ம் எனப்படும் தசை குறித்து எலினாவின் பெற்றோர்கள் அறியாததால் அதற்கான சிகிச்சை எடுக்காமல் இருந்த நிலையில் எகிறி குதித்து விளையாடும்போது பாதிப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்