திருவாரூர்: திருவாரூர் அருகே உள்ள புலிவலம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பொதுத்தேர்வை சந்திக்கவிருக்கும் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுடன் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ கலந்துரையாடினார்.
அப்போது அவர் பொதுத்தேர்வை மாணவ மாணவிகள் அச்சமின்றி சந்திக்க வேண்டும் என்றும், இதுவரை படித்தது மட்டுமல்லாமல், அனைவரும் வரும் நாட்களில் கவனமுடன் படித்து, திருப்புதல் தேர்வுகளை கவனமாக எழுதி பொதுத்தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்றும் மாணவ மாணவிகள் மத்தியில் உரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து மாணவ மாணவிகளை அவர் தன்னிடம் கேள்வி கேட்கலாம் என்றும் கூறினார். அதில் ஒரு மாணவி நீங்கள் கலெக்டர் ஆனதற்கான காரணம் என்னவென்று கேட்ட கேள்விக்கு மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்தார்.
"கலெக்டர் ஆவதற்கு தனித்தேர்வு என்று எதுவும் கிடையாது. சிவில் சர்வீஸ் தேர்வுகளில் இந்திய ஆட்சிப் பணி தேர்வை எழுத வேண்டும். அதில் கட் ஆப் மார்க் அடிப்படையில் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் என பிரிக்கப்பட்டு பணிகள் வழங்கப்படும்.
கலெக்டர் என்பது தாங்கள் பணிபுரியும் 30 வருடத்தில் இரண்டு, மூன்று வருடத்திற்கு மட்டுமே கலெக்டராக இருக்க முடியும். ஐஏஎஸ், ஐபிஎஸ் என்று அனைத்து பதவிகளும் மக்களுடன் நெருங்கி பழகக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது.
மக்களுடைய குறைகளை கலெக்டர் அலுவலகத்தில் மனுவாக கொடுத்தால் நிவர்த்தி செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. நான் படிக்கும் பள்ளியில் இருந்து பத்து நிமிட பயண தூரத்தில் கலெக்டர் அலுவலகம் இருந்தது. விழிப்புணர்வு பேரணி போன்றவற்றிற்கு போகும்போது, மாவட்ட ஆட்சியரை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
மேலும் செய்தித்தாள்களில் அடிக்கடி மாவட்ட ஆட்சியரின் செய்திகளை பார்க்கும்போதும், கலெக்டர் என்பது இவ்வளவு பெரிய பதவியா என்று சின்ன வயதில் இருந்து ஆசைப்பட்டு, அதுக்கு என்னென்ன தேர்வு எழுத வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு, எட்டாம் வகுப்பிற்கு மேல் அதை நோக்கி பயணித்தேன்.
பொதுவாக நாம் ஒரு விஷயத்திற்கு ஆசைப்படும்போது, அடுத்தவர்களை பார்த்துதான் ஆசைப்படுகிறோம். நாமாக எந்த முடிவும் எடுப்பதில்லை. அப்படி கோயம்புத்தூரில் உள்ள கலெக்டர்களை பார்த்து நானும் கலெக்டர் ஆக வேண்டும், மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தேன்.
அதனால்தான் இப்போது உங்களுடன் பேச முடிகிறது. உங்களை ஊக்குவிக்க முடிகிறது. இதுவே கலெக்டராகவில்லை என்றால், எப்படி உங்களுடன் பேச முடியும், உங்களை எப்படி ஊக்குவிக்க முடியும்?" என கூறினார்.
இதையும் படிங்க: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு நடிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பு!