திருவாரூர்: தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி கனமழை பெய்துவரும் நிலையில் டெல்டா மாவட்டங்களில் பெய்துவந்த தொடர் கனமழையால் சம்பா தாளடி பயிர்கள் முழுவதும் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.
இந்நிலையில், ஸ்டாலின் டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்துவருகிறார்.
அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகேவுள்ள ராயப்பநல்லூர், புழுதிக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ள சம்பா தாளடி பயிர்களை நேரடியாகச் சென்று பார்வையிட்டு அலுவலர்களிடமும், விவசாயிகளிடமும் குறைகளைக் கேட்டறிந்து உரிய நிவாரணம் வழங்கப்படுவதாக உறுதியளித்தார்.
அதனைத் தொடர்ந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளான வேட்டி, சேலைகள், வீட்டுமனைப் பட்டா உள்ளிட்டவற்றை வழங்கினார். இந்நிகழ்வில் அமைச்சர் கே.என். நேரு, மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பூண்டி கலைவாணன், டி.ஆர்.பி. ராஜா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை - தமிழ்நாடு அரசு ஆணை