மத்திய அரசு கொண்டுவந்துள்ள தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறுவிதமான போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்தச் சட்டம் சிறுபான்மையினருக்கு எதிராக உள்ளதாகவும் எனவே அதனைத் திரும்பப் பெற வலியுறுத்தி மத்திய அரசையும் அதனை எதிர்க்காத தமிழ்நாடு அரசையும் கண்டித்து இஸ்லாமிய அமைப்பினர் பேரணியில் ஈடுபட்டனர்.
அதன்படி, திருவாரூர் அருகே அடியக்கமங்கலம் கடைவீதியிலிருந்து 300-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தேசிய கொடியுடன் பேரணியாகச் சென்று ரயில் நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
போராட்டக்காரர்களைத் தடுக்க காவல் துறையினர் தடுப்புகளை அமைக்க முயன்றனர். இதனால் காவலர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பின்னர் போராட்டக்காரர்கள் தடுப்புகளையும் காவல் துறையினரையும் தள்ளிக்கொண்டு அந்த வழியாக வந்த சரக்கு ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரைமணி நேர போராட்டத்திற்குப் பிறகு அனைவரையும் திருவாரூர் தாலுகா காவல் துறையினர் கைதுசெய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அடியக்கமங்கலம் ரயில் நிலையத்தில சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இதையும் படிங்க: இந்தியைவிட 'தாய்மொழி' கண் போன்றது - வெங்கய்யா நாயுடு