திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நகராட்சிக்குச் சொந்தமான வணிக வளாகங்களுக்கான வாடகை வரியை நான்கு மாதங்களுக்கு முன்பு எந்தவிதமான முன்னறிவிப்பின்றி உயர்த்தி, இரண்டாண்டுகளுக்கு செலுத்த வேண்டிய குத்தகைத் தொகையை முன்கூட்டியே செலுத்த வேண்டும் என நகராட்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இச்சூழலில், கூடுதல் வாடகை செலுத்ததாத கடைகளுக்கு திடீரென நகராட்சி அலுவலர்கள் பூட்டி சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். இதனால், ஆத்திரமடைந்த வணிகர்கள், வியாபாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்ட அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனையடுத்து, மன்னார்குடியில் நகராட்சி வணிக வளாக வணிகர்கள் இந்த நடவடிக்கையை கண்டித்து சாலை மறியலில் ஈடுப்பட்டனர். இதனிடையே, இவ்வளவு பெரிய வாடகைத் தொகையை கட்ட முடியவில்லை என கூறி வியாபாரி ஒருவர் உடம்பில் மண்ணெணய் ஊற்றி கொண்டு தீ வைக்க முயன்றார். அப்போது அருகில் இருந்த காவல்துறையினர் அவரை தடுத்து அவரது உடலில் தண்ணீர் ஊற்றினா். இந்த சம்பவத்தால் மன்னார்குடியில் பரப்பரப்பு ஏற்பட்டது.
இதனிடையில் பேசிய மன்னார்குடியில் நகராட்சி வணிகர் சங்கச் செயலாளர் ஆர்.வி. ஆனந்த், “வரி கட்ட முடியாமல் வர்த்தகர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வரியை கொஞ்சம் கொஞ்சமாக கட்டி வருகிறோம். ஆனால் திடீரென நகராட்சி அலுவலர்கள் கடைகளுக்கு சீல் வைத்து வருகின்றனர். இது மிகவும் கண்டிக்கதக்கது. மன்னார்குடியில் நகராட்சி உடனடியாக வாடகையை குறைக்க வில்லையெனில் மார்ச் 7ஆம் தேதி திருவாரூருக்கு வருகை தரும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக் கொடி காட்டப்படும்” என எச்சரிக்கை விடுத்து பேசினார்.
இதையும் படிங்க : குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடுபவர்களை கைது செய்ய காவல்துறைக்கு ஆணை!