மத்திய அரசின் மின்சார சட்டதிருத்த வரைவு மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக மன்னார்குடியில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்டு செய்தியாளர்களை சந்தித்த பி.ஆர் பாண்டியன் கூறியதாவது, “நிலத்தடி நீரை பயன்படுத்தி விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசாங்கம் இலவச மின்சாரத்தை வழங்கி தொடர்ந்து விவசாயத்தில் மிகை உற்பத்தியை கையாண்டு வருகிறது.
மேலும் கர்நாடகத்திடம் இருந்து 50 ஆண்டுகாலம் போராடிப் பெற்ற உரிமைகள் பறிபோய்விடும் என்ற நிலையில் காவிரி டெல்டாவை அழிக்கும் உள்நோக்கத்தோடு மேட்டூர் அணையில் இருந்து சேலம் மாவட்டத்திற்கு தண்ணீரை கொண்டு செல்வதற்காக மேட்டூர் அணையின் இடது கரையில் திப்பம்பட்டி என்கிற இடத்தில், 80 அடி ஆழத்தல் 100 அடி அகலத்தில் மிகப்பெரிய புதிய ஆறு உருவாக்கி, மேட்டூர் அணையை உடைத்து காவிரி டெல்டா விவசாயிகளுக்கு தண்ணீரை நாங்கள் கொண்டு செல்கிறோம் என்ற பெயரில் சட்டத்திற்கு புறம்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனது மாவட்டத்திற்கு கொண்டு செல்கிறோம் என்கிற பெயரில் அவர் சொந்த தொகுதி கொண்டு செல்வதற்கு முயற்சி எடுப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
எனவே உடனடியாக அதனை கைவிட வேண்டும் என வலியுறுத்தி, இந்த உண்ணாவிரத போராட்டத்தை தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் கரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி அமைதி வழியில் தனது வீடுகளிலும், அலுவலகங்களிலும், வயல்வெளிகளில் உண்ணாவிரதம் இருந்து வரும் விவசாயிகளை காவல்துறையினர் மிரட்டும் நடவடிக்கையை கைவிட வேண்டும்” என பி.ஆர் பாண்டியன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து முதலமைச்சர் நலம் விசாரிப்பு!