திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசினார். அதில், ''தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகள் செயலற்று முடங்கியுள்ளது. வேளாண் கடன் கிடைக்காத விவசாயிகள் மனமுடைந்து செய்வதறியாது உள்ளனர். எனவே, நிபந்தனையின்றி சாகுபடிப் பணிகளில் ஈடுபடும் அனைவருக்கும் பழைய முறையைப் பின்பற்றி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்கிட வேண்டும்.
வேளாண் கூட்டுறவு வங்கிகளை முடக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் மத்திய அரசைக் கண்டித்து, மாநில அரசு உடனடியாக பழைய நடைமுறையைப் பின்பற்றி, தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்கிட உரிய அரசாணை பிறப்பித்து, நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வரும் ஜூலை 31இல் காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கிகளை முற்றுகையிட்டு, விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளோம்.
விவசாயிகளைக் கொச்சைப்படுத்தி, அருவருக்கத்தக்க வார்த்தைகளால் மாரிதாஸ் என்ற நபர் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருவதை வன்மையாக கண்டிக்கிறோம். மாரிதாஸை கைது செய்து, உரிய நடவடிக்கை மேற்கொள்வதோடு, இவரது இணையதள கணக்குகளை முடக்க அரசு முன் வர வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம்'' என்றார்.
இதையும் படிங்க: டாக்டர்கள் இல்லை... முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் - மீளுமா விருதுநகர்?