திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டது. தற்போது பருத்தி அறுவடைப் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் பருத்தியை விற்பனை செய்வதற்காக திருவாரூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு விவசாயிகள் வாரந்தோறும் வருகின்றனர்.
இந்நிலையில், நான்கு நாள்களாகப் பருத்தியைக் கொள்முதல் செய்யாமல் தங்களைக் காத்திருக்க வைத்திருப்பதாகவும், அரசு நிர்ணயித்த விலையில் பருத்தியைக் கொள்முதல் செய்யாமல் குறைந்த விலைக்கு தனியார் வியாபாரிகள் ஏலம் எடுப்பதாகவும் கூறி நேற்று விவசாயிகள் சாலை மறியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது தொற்றை மற்றவர்களுக்குப் பரப்புதல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், காவல் துறை அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபடுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் 50 பேர் மீது திருவாரூர் நகரக் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.