திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள கீழத்திருப்பாலக்குடி பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஹரசுதன் (18) சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவரது சகோதரி தனிஷா (12) இவர் தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர்கள் இருவருக்கும் பெற்றோர் கொடுக்கும் பணத்தை சேமிக்கும் பழக்கம் உள்ளது. இதனால், இவர்கள் சேமிக்கும் பணத்தில் ஆண்டு இறுதியில் சுற்றுலா செல்வது வழக்கம்.
இந்நிலையில், கரோனாவால் அனைவரும் வேலை இழந்து பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் தங்களது சொந்த கிராமத்தில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு தங்களது சேமிப்பு பணம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கொண்டு 350 பேருக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வீடு வீடாகச் சென்று வழங்கினர்.
இந்நிவாரணப் பொருள் வழங்கும் நிகழ்ச்சியில் மன்னார்குடி ஒன்றியக்குழு உறுப்பினர் செந்தாமரை செல்வி, கீழத்திருப்பாலக்குடி ஊராட்சி மன்ற தலைவர் எழிலரசி, மாணவர்களின் பெற்றோர் செந்தில்முருகன், வினோதயா மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர்.
சிறு வயதிலேயே ஏழைகளுக்கு உதவும் நோக்கில் இவர்கள் செய்த இச்செயலை அனைவரும் பாராட்டினர். இவர்களின் இச்செயலானது அப்பகுதியில் உள்ள மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதையும் படிங்க:'அரசு தளர்வு அளித்தால் போதும்... நாங்கள் பாதுகாப்பாக சிகை திருத்துவோம்'