திருவாரூர்: பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுத்த நெல் ஜெயராமன் மறைந்து மூன்றாண்டுகளை நினைவுகூரும் வகையில், மன்னார்குடியில் உள்ள மாநில தலைமையக அலுவல கட்டடத்தில் அவரது உருவப் படத்திற்குத் தமிழக அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டில் பாரம்பரிய விவசாய முறைகளை மீண்டும் நினைவுப்படுத்தி பல்வேறு விழிப்புணர்வுப் பரப்புரைகளை மேற்கொண்டு நெல் திருவிழா மூலமாக உலகத்தின் பார்வையை ஈர்த்தவர் ஜெயராமன். 174 வகை பாரம்பரிய நெல் விதைகளை மீட்டெடுத்தவர்.
அவருடைய செயல்பாட்டால் நஞ்சில்லா உணவை உற்பத்திச் செய்ய வேண்டும் என்கிற உணர்வை உலக முழுமையிலும் ஏற்படுத்தியுள்ளார். அவரது கண்டுபிடிப்புகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் நெல் ஜெயராமன் நினைவாகப் பாரம்பரிய நெல் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி மையம் தொடங்கப்படும் என அரசு அறிவித்துள்ளதை வரவேற்கிறோம், பாராட்டுகிறோம்.
அவர் கண்ட கனவு நனவாகும் வகையில் அரசு மருத்துவ குணம் கொண்ட பாரம்பரிய விதைகளைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் நெல், சிறு தானிய வகைகள் உள்ளிட்ட விவசாய உற்பத்தி உணவுப் பொருள்களை மருத்துவமனைகள், ஊட்டச்சத்து மையங்கள், சத்துணவுக் கூடங்களில் கட்டாய உணவுப் பொருளாகப் பயன்படுத்துவதைக் கட்டாயமாக்க வேண்டும். பாரம்பரிய விவசாய உற்பத்திப் பொருள்களை உரிய விலை கொடுத்து கொள்முதல் செய்வதற்கு அரசு முன்வர வேண்டும்.
2020-21ஆம் ஆண்டு காப்பீடு செய்த விவசாயிகளுக்கு 190-க்கு மேற்பட்ட கிராமங்களுக்கு ஜீரோ எனக் கணக்கிடப்பட்டு இதுவரையிலும் இழப்பீடு வழங்க மறுத்துவருவது வேதனை அளிக்கிறது. உடனடியாக அனைத்துக் கிராமங்களுக்கும் விடுபடாமல் இழப்பீடு வழங்க வேண்டும்.
குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 விலை நிர்ணயம்செய்து நெல் கொள்முதல் செய்ய அரசு முன்வர வேண்டும். தமிழ்நாடு முழுமையிலும் பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சம்பா, தாளடி பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.25,000 இடுபொருள் இழப்பீடாக அனைவருக்கும் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டை பேரிடர் பாதிக்கும் மாநிலமாக அறிவித்திட வேண்டும். இதனை வலியுறுத்தி வருகிற 16ஆம் தேதி சென்னை கோட்டையை ஆயிரக்கணக்கான விவசாயிகள் முற்றுகையிட உள்ளோம்.
தொடர்ந்து தமிழ்நாட்டில் தற்போது பாதிக்கப்பட்ட பயிர்களை மறு உற்பத்தி செய்வதற்கு விவசாயிகள் முன்வரும் நிலையில் யூரியா, பொட்டாஷ், டிஏபி போன்ற உரங்கள் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு, வெளிச்சந்தையில் பதுக்கிவைத்துக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனைத் தடுத்து நிறுத்த வேளாண் துறை தொடர்ந்து தயக்கம் காட்டிவருவது விவசாயிகளை அச்சம் அடையச் செய்துள்ளது. எனவே முதலமைச்சர் சிறப்புக் கவனம் செலுத்தி உரத் தட்டுப்பாட்டைப் போக்கவும், உரிய விலையில் கிடைப்பதை உறுதிசெய்திடவும் முன்வர வேண்டும்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: கரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம்