மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 39ஆவது சரக்கு மற்றும் சேவை வரி கலந்தாய்வுக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் உரத்திற்கான சரக்கு மற்றும் சேவை வரியை 12 விழுக்காடாக உயர்த்த முயற்சிப்பதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த பாண்டியன், "உரத்திற்கான ஐந்து விழுக்காடு சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பை எதிர்த்து விவசாயிகள் போராடிவரும் நிலையில், தற்போது மீண்டும் 12 விழுக்காடாக உயர்த்த மத்திய அரசு முயற்சிப்பதாக வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
இதன்மூலம் விவசாய உற்பத்திச் செலவு உயர்ந்து, விவசாயம் பாதிக்கும் நிலை ஏற்படும். எனவே உடனடியாக உரத்திற்கான சரக்கு மற்றும் சேவை வரியில் விலக்கு அளிக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், "உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால்தான் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துவருவதாக மத்திய அரசு கூறிவந்தது. தற்போது கச்சா எண்ணெய் விலை பல மடங்கு குறைந்துவரும் நிலையில், திடீரென மத்திய அரசு மூன்று விழுக்காடு கலால் வரி விதித்து விலை குறைவைத் தடுத்து மறைமுக மோசடி நடவடிக்கையில் ஈடுபடுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம். அதனை உடனடியாக மறு பரிசீலனை செய்து திரும்பப் பெற வலியுறுத்துகிறோம்" என்றார்.
தொடர்ந்து பேசிய பாண்டியன், "காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தும், ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு தடைவிதித்து தமிழ்நாடு அரசு சட்டம் கொண்டுவந்துள்ளது.
தனது அதிகார வரம்பிற்குள்பட்டு விவசாயிகள் நலன்கருதி அச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை ஏற்று ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு தானே முன்வந்து கொள்கைப்பூர்வமாகக் கைவிட முன்வர வேண்டும்" தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:பாதுகாப்பு ரகசியம் கடத்தல்: இலங்கையைச் சேர்ந்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை