திருவாரூர்: 10 ஆண்டுகளாகக் காதலித்தவருடன் ஒன்றாக குடும்பம் நடத்தி வந்த நிலையில் கர்ப்பமான பெண், திருமணம் செய்து கொள்வதற்காகக் காதலன் 15 பவுன் நகை கேட்பதாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 29 வயது பெண்மணி, பக்கத்து ஊரைச் சேர்ந்த விக்னேஷ் (30) என்பவரைக் கடந்த 10 ஆண்டுகளாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி கோயம்புத்தூரில் வேலை பார்த்த வெங்கடேஷ், தான் தங்கியிருந்த வீட்டில் வைத்து யாருக்கும் தெரியாமல் அந்த பெண்ணுக்குத் தாலி கட்டி, கோயம்புத்தூரில் உள்ள சரவணப்பட்டி என்கிற இடத்தில் ஒரே வீட்டில் கணவன் - மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், தற்போது அந்த பெண் 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். பலமுறை திருமணம் செய்து கொண்டதை உங்கள் வீட்டிற்குத் தெரியப்படுத்துங்கள் என்று விக்னேஷிடம் அந்த பெண் கூறி வந்த நிலையில், நீ உனது ஊருக்கு போ, நான் என் அப்பா, அம்மா மற்றும் உறவினர்களை அழைத்துக் கொண்டு உங்கள் ஊருக்கு வந்து முறைப்படி பெண் கேட்டு திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இதை நம்பி, கடந்த டிசம்பர் மாதம் 15ஆம் தேதி அந்த பெண் அவரது சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, அந்த பெண்ணை விக்னேஷ் பெண் கேட்டு வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து, விக்னேஷை தொலைப்பேசியில் அந்த பெண் தொடர்பு கொண்டு பேசிய போது, விக்னேஷ் தனது வீட்டில் 15 பவுன் நகை வரதட்சணையாகக் கேட்பதாகவும், அதற்கு ஒத்துக் கொண்டால் திருமணம் செய்து கொள்வதாகவும், இல்லை என்றால் வேறு இடத்தில் திருமணம் செய்து கொள் என்று கூறிவிட்டு தொலைப்பேசியை சுவிட்ச் ஆப் செய்து விட்டார் என்று கூறப்படுகிறது.
இது குறித்து, திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கணவருடன் தன்னை சேர்த்து வைக்குமாறு அந்த பெண் கடந்த 3ஆம் தேதி புகார் செய்ததாகவும், அங்கு போலீசார் அவரது புகார் மனுவையும் கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளாமல் நிராகரித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து, உரிய நடவடிக்கை எடுத்து தனது கணவரோடு தான் சேர்ந்து வாழ வழி வகை செய்திடுமாறு அந்த பெண் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.