திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள தலையமங்கலம் கிராமத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டுவரை தனி அலுவலர்கள் இருந்த காலங்களில் பாரத பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் 144 நபர்களுக்கு வீடு கட்டி தராமல் இருந்தனர். அதுபோல மத்திய அரசின் கழிவறை கட்டும் திட்டத்தில் 70 நபர்களுக்கு கழிவறைகள் கட்டிக்கொடுக்காமல், பயனாளிகளின் பெயரில் போலியாக ஆவணங்களை தயார் செய்தனர்.
மேலும் ஆளும் அரசியல் கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கூட்டணி அமைத்து சுமார் 5 கோடி ரூபாய்வரை மோசடி செய்துள்ளனர். ஆனால் காவல் துறையினர் இதுவரை அவர்களை கைது செய்யவில்லை. அதற்கு மாறாக வீடு கேட்டு மனு கொடுத்தவர்கள் மற்றும் போராடியவர்கள் மீதும் பொய்வழக்கு பதிவு செய்தனர்.
எனவே மன்னார்குடி அருகே தலையாமங்கலம் காவல் நிலையம் முன்பு 100-க்கு மேற்பட்ட பயனாளிகள் காவல் துறையினரை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பி முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
அதனை தொடர்ந்து தலையாமங்கலம் ஊராட்சி முழுவதும் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகளை கட்டாமலே கட்டியதாக பலகோடி ரூபாய் மோசடி செய்யப்பட்ட பகுதிகளில் மாவட்ட உதவி திட்ட அலுவலர் பொன்னியின்செல்வன் தலைமையில் 20-க்கு மேற்பட்ட அதிகாரிகள் வீடு வீடாக சென்று பயனாளிகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தொடக்க கல்வித்துறை உத்தரவு