ஊரடங்கின் காரணமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் கடந்த இரண்டு மாதங்களாக பணிக்குச் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இதனால், அவர்களின் வாழ்வாதாரம் இழந்து உணவிற்கு திண்டாடிவருகின்றனர்.
இந்நிலையில், தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் பதிவுசெய்த தொழிலாளர்களுக்கு 2ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்குவதாக தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. திருவாரூர் மாவட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்கள் உள்ளனர்.
இவர்களில் தொழிலாளர்கள் நல வாரிய அலுவலகத்தில் ஆயிரத்து 100 பேர் மட்டுமே பதிவு செய்திருக்கின்றனர். இவர்களில் ஒரு சிலரை தவிர வேறு யாருக்கும் இதுவரை நிவாரணம் வந்து சேரவில்லை.
இதைக் கண்டித்து, திருவாரூர் மாவட்ட தொழிலாளர் நல வாரிய அலுவலகம் முன்பாக சிஐடியு ஆட்டோ சங்கத்தின் சார்பில் 200க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள், கைகளில் குடைககள் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், கரோனா நிவாரண நிதியை 15 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும், உரிமம் வைத்துள்ள அனைத்து ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் பாகுபாடின்றி நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இதேபோல், நெல்லை மாவட்டத்தில் சமூக இடைவெளியுடன் ஆட்டோக்களை இயக்கிடவும், அனைத்து ஆட்டோ தொழிலாளர் குடும்பத்திற்கும் 15 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கிட கோரியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதையும் படிங்க: ஊரடங்கில் சவாரி - 200 ஆட்டோக்கள் பறிமுதல்!