நோயாளிகள் அவசரத்திற்கு ஆம்புலன்ஸை அழைப்பார்கள், ஆனால் மாறாக நோயாளிகளை ஆம்புலன்ஸின் அவசரத்திற்கு அதன் ஓட்டுநர் அழைத்துள்ள சம்பவம் தமிழ்நாட்டில் அரங்கேறியுள்ளது.
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், நோயாளிகளின் பயன்பாட்டிற்காக எந்நேரமும் இலவச 108 ஆம்புலன்ஸ் வசதி இருந்து வருகிறது. இந்நிலையில் ஆம்புலன்ஸ் வசதியை பயன்படுத்தி நோயாளி ஒருவரை அழைத்துச் செல்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் பழுதின் காரணமாக ஆம்புலன்ஸ் வாகனம் இயங்காததால், அங்கிருந்த நோயாளிகளை அழைத்து ஆம்புலன்ஸை தள்ள ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அழைத்துள்ளார் . நோயாளிகள் ஆம்புலன்ஸை தள்ளி இயங்க வைக்க முற்படும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது .
மேலும் அவசரத்திற்கு அழைக்கப்படும் ஆம்புலன்ஸிற்கே இந்த நிலமையென்றால், நோயாளிகளின் நிலமை என்ன ஆகும் என சமூக செயற்பாட்டாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். மேலும், மாதந்தோறும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் சரிவர பராமரிக்கப்படாததால் இதுபோன்ற பழுதுகள் ஏற்பட்டு, ஆங்காங்கே நின்று விடுவதாக பொதுமக்களும், நோயாளிகளும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.