திருவாரூர் மாவட்டம் கொல்லுமாங்குடி கடைத்தெருவில் அனைத்து தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கரோனா தொற்றை ஆயுதமாக பயன்படுத்தி தொழிற்சாலைகள், நிலக்கரி, சுரங்கங்கள், விண்வெளி அறிவியல், அணுவாற்றல், காப்பீடு, வங்கி, ரயில்வே, மின்சாரம் உள்ளிட்டவைகளை தனியாருக்கு தாரைவார்ப்பதை கண்டித்தும், அத்தியாவசிய பொருள்கள் சட்டம் 2020 ரத்து செய்திட வேண்டும், வேளாண் விளைபொருள்கள் வணிக ஊக்குவிப்பை வாபஸ் பெற வேண்டும், விவசாயிகளுக்கு விலை உத்திரவாதம் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்தங்கள் பாதுகாப்பு அவசர சட்டம் 2020-ஐ அமல்படுத்தக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள்.
மேலும் அவசர மின் சட்டத்திருத்த மசோதா வாபஸ் பெற வேண்டும், முதியோர் பென்சன் ஆயிரம் ரூபாய் என்பதை உயர்த்தி மூன்று ஆயிரம் ரூபாயாக வழங்க வேண்டும், கட்டுமானம், ஆட்டோ, உடலுழைப்பு தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்தவர்கள், பதிவு செய்யாதவர்கள் என பாகுபாடு பார்க்காமல் அனைவருக்கும் ஏழு ஆயிரத்து 500 முதல் 22 ஆயிரத்து 500 வரை நிவாரணம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது 4-வது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் உதுமான், அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.