மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் அனைத்து விவசாய சங்கங்களும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றன.
இதன் ஒரு பகுதியாக திருவாரூரில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினர் 200-க்கும் மேற்பட்டோர் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மாசிலாமணி தலைமையில் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பேரணியாக நடந்துசென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டத் திருத்தங்களைத் திரும்பப் பெற வேண்டும், டெல்லியில் காவல் துறையின் அடக்குமுறைகளையும் தாண்டி போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண் சட்டங்களை எதிர்த்து தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக தொடர் மழையிலும் கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாட்டின் அனைத்து விவசாய சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.