இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பருவம் மாறி வடகிழக்கு பருவமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிர்கள் முற்றிலும் அழிந்து நாசமாகி விட்டது.
ஏற்கனவே நிவர் புரவி புயல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களுக்கு தமிழ்நாடு அரசின் இடுபொருள் இழப்பீட்டு தொகை பேரிடர் மேலாண்மைத் திட்டத்தின் கீழ் தற்போது பாதிப்பிற்கு ஏற்ப நிலப்பரப்பில் 20, 30, 50, 70, 90 விழுக்காடு வரை கிராமத்திற்கு கிராமம் வேறுபடுத்தி வழங்கப்பட்டு வருகிறது .
இந்நிலையில் தற்போது பெய்து வரும் கடும் மழை பொழிவால் கதிர் வந்த நிலையில் இருந்த பயிர்கள் மற்றும் காய் கட்டிய நிலையிலும், முதிர்ந்து அறுவடைக்கு தயாரான நிலையில் இருக்கக்கூடிய அனைத்து சம்பா, தாளடி பயிர்களும் 100 விழுக்காடு முற்றிலும் சாய்ந்து அழுகி அழிய தொடங்கிவிட்டது.
கிராமங்கள் தோறும் பொங்கல் விழா கூட, விவசாயிகள் கலையிழந்து சோகத்தில் வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர். தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, செங்கல்பட்டு மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டு தொடர்ந்து பயிர்கள் நாசமாகி வருகிறது.
எனவே தமிழக அரசு மறு கணக்கெடுப்பு நடத்தி பொங்கலுக்குப் பிறகு பாதிப்பு குறித்து இறுதி செய்திட வேண்டும். மேலும் பயிர் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு முழு இழப்பீடு பெறுவதற்கான நடவடிக்கைகளையும் உத்தரவாதப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
அறுவடை ஆய்வு என தட்டிக் தழிப்பதை கைவிட்டு, மழை அளவை கணக்கில் கொண்டு மாவட்ட அளவில் சராசரியாக முழு இழப்பீடு நிர்ணயம் செய்ய காப்பீட்டு நிறுவனம் முன்வர வேண்டும். மாவட்ட ஆட்சியர்களின் ஒப்புதல் பெற்று இழப்பீடு இறுதி செய்வதை மத்திய, மாநில அரசுகள் உத்தரவாதப்படுத்த வேண்டும். அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்க முன்வர வேண்டும்.
தொடர்ந்து காப்பீட்டு நிறுவனத்தின் ஆய்வு பணிகளை தற்போதிலிருந்து தமிழ்நாடு அரசு உரிய கவனம் செலுத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மார்ச் மாத இறுதிக்குள் முழு இழப்பீடு பெற்று தர தமிழ்நாடு அரசு உரிய அவசரகால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் சார்பில் வலியுறுத்துகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.