திருவாரூர் மாவட்டம் அதிமுக சார்பில் வாக்காளர் பட்டியல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர் காமராஜ் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்; 'இந்தியா முழுவதும் தேசிய உணவு பாதுகாப்பு திட்டம் செயல்படுத்த உள்ளது. இடம்பெயர்ந்து வரும் பிற மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில், உள்ள நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக் கொள்ளும் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. வெவ்வேறு மாநிலத்திற்குச் சென்று வேலை செய்யக்கூடிய தொழிலாளர்கள் பசியுடன் இருக்க கூடாது என்பதற்காக மத்திய அரசு கூடுதலாக வழங்கக்கூடிய அரிசி , கோதுமைப் பொருட்களை வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளது. மத்திய அரசு இந்த திட்டத்திற்கு ஒரே நாடு ஒரே ரேசன் என்று என்ன பெயர் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். இது நமது பொது விநியோக திட்டத்தை பாதிக்காது’ என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ’மாநில உரிமைகளை விட்டுக்கொடுத்து நாங்கள் கைகட்டி வாய் பொத்தி பாரதிய ஜனதா அரசுக்கு அடிபணியும் நிலையில் இல்லை. ஒருபோதும் மாநில உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம். தமிழ்நாடு முதலமைச்சர் வெளிநாடு சுற்றுப்பயணம் முடித்து வந்த பின்னர் ஒரே நாடு ஒரே ரேசன் திட்டத்தின் கீழ், முதல் கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுகளையும் இணைத்து விரைவில் அறிவிப்பார்’ என்றார்.