புரெவி புயல் காரணமாக பாதிக்கப்பட்ட திருத்துறைப்பூண்டியை அடுத்த கொக்கலடி உள்ளிட்ட பகுதிகளில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (டிச.9) நேரில் ஆய்வு செய்தார். ஆய்வின்போது, சம்பா நெற்பயிர்களை வயலில் இறங்கி பாதிப்புகள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “இதுவரை கணக்கிட்ட பயிர் சேத அடிப்படையில் நெற்பயிர் 53 ஆயிரத்து 63 ஹெக்டேரும், இதர பயிர்கள் 13 ஆயிரத்து 250 ஹெக்டேரும் பாதிக்கப்பட்டுள்ளன. அத்துடன், வாழை பயிரிடப்பட்ட 571 ஹெக்டேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. பாதிக்கப்பட்ட சில பகுதிகள் விடுபட்டு இருப்பதால், அவற்றையும் உரிய வகையில் கணக்கெடுத்து அனுப்ப மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு வழங்கியுள்ளேன்.
அதிமுக அரசு அரியணை ஏறிய பிறகுதான் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட அளவு நிதி ஒதுக்கி, மீனவ மக்களின் கோரிக்கையை ஏற்று அதிகளவில் தூண்டில் வளைவுகள் அமைக்கப்பட்டன.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களில் என்ன தவறு இருக்கிறதென சொல்லுங்கள். இந்த மூன்று சட்டங்களில் தமிழ்நாடு விவசாயிகள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்று சொல்லுங்கள் நான் பதில் கூறுகிறேன். நான் தமிழ்நாட்டு விவசாயிகளை பற்றி மட்டும்தான் பேசுகிறேன். வேளாண் திருத்த சட்டங்களில் விவசாயிகளுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை. வேளாண் சட்டங்களை அதிமுக அரசு முழுமையாக ஆதரிக்கிறது. ஆன்லைன் வர்த்தகம்தான் விவசாயிகளுக்கு நன்மை விளைவிக்கும். வேளாண் திருத்த சட்டங்கள் விவசாயிகளுக்கு ஏற்ற சட்டம்தான்.
ஆ.ராசா என்ன பெரிய தலைவரா ? எந்தக் கட்சிக்கு தலைவர் ? திமுகவில் வேண்டுமானால் அவர் தலைவராக இருக்கலாம். எங்கள் கட்சியின் கிளை செயலாளருக்கு இருக்கும் மரியாதைகூட அவருக்கு கிடையாது. தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவையே உலக அளவில் தலைகுனிய வைத்தவர் ஆ.ராசா.
எட்டுவழி சாலை திட்டம் மத்திய அரசின் திட்டம். நிலத்தை கையகப்படுத்துவதுதான் மாநில அரசின் பணி. தமிழ்நாடு வளர்ந்து வருகின்ற மாநிலம், எனவே இந்த எட்டு வழி சாலை திட்டம் நடைமுறைக்கு வந்தால் போக்குவரத்து நேரமும், நெரிசலும் குறையும். அப்போதுதான் மக்கள் அச்சம் இல்லாமல் பயணம் செய்ய முடியும்” என்றார்.
முன்னதாக, கச்சனம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் புரெவி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் காமராஜ், வேளாண் துறை அமைச்சர் (கூடுதல் பொறுப்பு) கே.பி.அன்பழகன், வேளாண் உற்பத்தி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, மாவட்ட ஆட்சியர் சாந்தா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க : வேளாங்கண்ணி பேராலயம், நாகூர் தர்காவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழிபாடு