திருவாரூர்: முட்புதரில் அழுதுகொண்டிருந்த பச்சிளம் குழந்தையை ஊர் மக்கள் மீட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
திருவாரூர் மாவட்டத்திற்குட்பட்ட கொத்ததெரு காளியம்மன் கோயில் அருகேயுள்ள சாலையோர முட்புதரிலிருந்து குழந்தையின் அழும் சத்தம் கேட்டுள்ளது. அழுகுரலை நோக்கி சென்ற பொதுமக்கள், அங்கு ஆதரவற்ற நிலையிலிருந்த பிறந்த சில மணிநேரமே ஆன பெண் குழந்தையைக் கண்டு அதிர்ந்துள்ளனர்.
உடனடியாக குழந்தையை மீட்ட பொதுமக்கள், அதன் அழுகையை நிறுத்துவதற்கு பெரும் முயற்சிகள் எடுத்தனர். ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை. அப்போது அந்த கூட்டத்திலிருந்து ரம்யா என்ற பெண், குழந்தையை தாய்பால் கொடுத்து, பசியாற்றி சமாதானப்படுத்தினார்.
இந்நிகழ்வு அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதையடுத்து குழந்தை முட்புதரில் கிடைத்த சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்து குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, குழந்தைகள் நல அமைப்பினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் அடிப்படையில் வந்த குழந்தைகள் நல அமைப்பின் நிர்வாகிகளிடம் குழந்தை பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது. பச்சிளம் குழந்தையை ஆதரவற்ற நிலையில், சாலையருகே வீசிவிட்டுச் சென்ற கயவர்களை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: பிறந்த குழந்தையை விற்ற அரசு மருத்துவர் மீது வழக்குப்பதிவு!