கடந்த சில நாள்களுக்கு முன்பு காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அதிமுக அரசு அரசிதழில் வெளியிட்டது.
தமிழ்நாடு விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும்வகையில் வருகின்ற மார்ச் 7ஆம் தேதி திருவாரூரில் விவசாயிகள் சார்பில் பிரமாண்ட பாராட்டு விழா நடைபெறவுள்ளது.
இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்த பி.ஆர். பாண்டியன், ”டெல்டா பகுதியை பாலைவனமாக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை நீக்கம் செய்ய வேண்டும், டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் பல ஆண்டுகளாகப் போராடிவந்தனர்.
இக்கோரிக்கையை தமிழ்நாட்டின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செவிமடுத்து கேட்டு, டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்து அரசாணையை வெளியிட்டுள்ளது.
இது வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு, விவசாயிகளை முழுக்க பாதுகாக்கும் நோக்கில் அரசு சாணக்கியதனத்துடன் செயல்பட்டுள்ளது. எனவே முதலமைச்சருக்கு வருகின்ற மார்ச் 7ஆம் தேதி திருவாரூரில் நடைபெறவுள்ள பிரமாண்டமான பாராட்டு விழாவில் லட்சக்கணக்கான விவசாயிகள் கலந்துகொள்ளவுள்ளனர்” எனத் தெரிவித்தார்.
இவ்விழாவிற்கான மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்றுவரும் இடத்தினை தமிழ்நாடு உணவுத் துறை அமைச்சர் காமராஜ், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஆனந்த், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை, காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
இதையும் படிங்க: பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்: அரசிதழ் வெளியீடு