திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகேயுள்ள கடகம் கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். இந்தப் பகுதிக்கு சாலை வசதி கிடையாது, இப்பகுதிக்குள் செல்ல வேண்டும் என்றால் ஆற்றில் போடப்பட்டுள்ள தட்டிப்பாலத்தைக் கடந்துதான் செல்ல வேண்டும். முறையான பால வசதிகள்கூட இங்கு இல்லை.
ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள தட்டிப்பாலத்தைத்தான் இப்பகுதி மக்கள் கடந்த 50 வருடங்களுக்கும் மேலாகப் பயன்படுத்திவருகின்றனர். தற்போது, இப்பாலமானது மிகவும் மோசமான நிலையில் பயன்படுத்த முடியாத சூழலில் உள்ளது. சமீபத்தில், மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்துவிடப்பட்டதால் பாலத்தின் மரச்சட்டங்கள், மூங்கில்கள் நீரில் நனைந்து சேதமாகியுள்ளன.
இதனால், பாலத்தை உபயோகிப்பதற்கு மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். பள்ளி மாணவர்கள், கர்ப்பிணிகள் பாலத்தைக் கடக்கும்போது மரண பயத்துடனே கடந்து செல்கின்றனர். கர்ப்பிணிகளுக்கு அவசர நேரத்தில் செவிலியர், மருந்துகள் கொடுப்பதற்கு, இப்பாலத்தைக் கடக்க தயங்குவதாகத் தெரிவிக்கும் இப்பகுதி மக்கள், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தத் துன்பத்தை அடைந்து வருகிறோம் என்றும் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஒருவருடத்திற்கு முன்பு சுந்தரவள்ளி என்ற மூதாட்டி பாலத்தில் வழக்கி விழந்து உயிரிழந்து போல் மற்றொரு உயிரிழப்பு ஏற்படக் கூடாது என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். குழந்தையைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லும்போது தனது மனைவி இந்தப் பாலத்தில் ஒருமுறை வழுக்கி விழுந்துவிட்டார் என்று கூறிய தேவேந்திரகுமார், "எல்லாரும் எப்பொழுது மழை பெய்யும் ஆற்றில் நீர் வரும் என்று காத்திருப்பார்கள். ஆனால், நாங்கள் இந்த ஆற்றில் நீர் பாய்ந்தால் மகிழ்ச்சியடைய மாட்டோம். மாறாக வேதனைப்படுவோம்.
மழைக்காலங்களில் பள்ளிக் குழந்தைகள் ஆற்றில் இறங்கிச் செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், அமைச்சரிடம் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்படி ஒரு பகுதி இருப்பதே அவர்களுக்குத் தெரியவில்லை. எங்கள் பகுதி மக்களின் உயிர்களைக் கவனத்தில் கொண்டு அரசு ஒரு கான்கிரீட் பாலம் அமைத்துக் கொடுக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: 'சாலைய சீரமைங்க... இல்லனா ரேஷன் கார்ட நீங்களே வச்சிக்கோங்க'