திருவாரூர் மாவட்டம் மட்டுமின்றி தஞ்சை, நாகை, கடலூர் விழுப்புரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் 2002ஆம் ஆண்டு முதல் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்திவருபவர் நீதி மோகன்.
தவணை முறையில் பணம் பெற்று வீட்டுமனைகள் வாங்கித் தருவதாகக்கூறி ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் 50 கோடி ரூபாய்க்கு மேல் பணத்தை ஏமாற்றியுள்ளதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இவர் மீது கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர் புகார்கள் குவிந்துவந்தன.
அதனை தொடர்ந்து நீதிமோகன் மீது வழக்குப்பதிவு செய்து தனிப்படை காவல் துறையினர் தேடிவந்தனர். இதனையடுத்து நீதிமோகன் தலைமறைவானார். அவரைப் பிடிக்க தனிப்படை அமைத்து காவல் துறை ஆறு மாத காலமாக தேடிவந்த நிலையில், நீதிமோகன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும், மேலும் இந்த மோசடி விவகாரத்தில் தொடர்பில் உள்ள பலரைக் காவல் துறையினர் தேடி வருவதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ரியல் எஸ்டேட் தொழிலதிபரை கைது செய்யக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு