திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தான் அருகே புத்தகரம், காரைதிடல், கும்மிட்டிதிடல், நொச்சியூர், மேட்டாங்குளம், கர்ணாவூர் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் தாளடி, சம்பா சாகுபடி செய்துவந்தனர்.
இந்நிலையில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக பெய்துவந்த கனமழையினால் மூன்றாயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்கி அழுகியுள்ளன. வயல்களிலிருந்து தண்ணீரை வெளியேற்ற முடியாமல் விவசாயிகள் கவலையில் தவித்துவருகின்றனர்.
மேலும் பாமணி ஆறு, கோரையாறு மூலம் விவசாயிகள் பாசனம் வசதிபெற்றும் கந்தகுறிச்சான் வடிகால் வாய்க்கால்களை முழுமையாகத் தூர்வாராத காரணத்தினால்தான் மழைநீர் வயல்களில் உள்ளே புகுந்துள்ளது என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், “கடந்த ஆண்டு பெருகவாழ்ந்தான் வருவாய் கிராமங்கள் முழுவதும் ஆனைக்கொம்பன் நோயால் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் முழுவதும் பாதிக்கப்பட்டது. விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்கவில்லை. இந்த நிலையில் கடந்த 10 நாள்களாக பெய்த கனமழை காரணமாக சம்பா பயிர்கள் முழுவதும் மழைநீரில் மூழ்கி அழுகி உள்ளன. இந்த ஆண்டாவது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு முறையாக நிவாரணமும் பயிர் காப்பீட்டுத் தொகையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை!