திருவாரூர்: நன்னிலம் அருகே உள்ள பேரளம் அரசு பள்ளியில் 1995ஆம் ஆண்டு பயின்ற மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தனியார் திருமண மண்டபத்தில் நிகழ்ச்சி ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தனர். தங்களது அரசு பள்ளி ஆசிரியர்களை கௌரவிக்கும் விதமாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட பழைய மாணவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, தங்களது ஆசிரியர்களுக்கு கேடயம் வழங்கியும், சால்வை அணிவித்தும் மரியாதை செலுத்தினர். பின்னர் அவர்களது குடும்பத்தினரும் ஆசிரியர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றனர்.
அப்போது மேடையில் தங்களது 25 ஆண்டுகளுக்கு முந்தைய பள்ளியில் பயின்ற பழைய நினைவுகளையும் அவர்கள் பகிர்ந்து கொண்டனர். அப்போது தங்களிடம் பயின்ற பல மாணவர்கள் அரசு உயர் பதவிகளை வகிப்பது மகிழ்ச்சி அளிப்பதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
சுமார் 25 ஆண்டுகளுக்கு பிறகு தங்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர்களை கௌரவப்படுத்திய பழைய மாணவர்களின் செயல் காண்போரை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது.
இதையும் படிங்க: மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுடன் புத்தாண்டு கொண்டாடிய மாவட்ட ஆட்சியர்